விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை

விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-02-24 15:50 GMT
வாலாஜா

விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, வேளாண்மை துறை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

இயற்கை உரம்

விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதை குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நம்மில் பலர் ஆரோக்கியத்தை இழக்கிறோம். ஆகவே அவசியம் இருந்தால் மட்டும் செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவரின் உடல் வளர்ச்சிக்கும் ஒரு நாளைக்கு 58 கிராம் புரோட்டீன் அவசியம். ஆனால் நம் நாட்டில் அதிகமான புரோட்டீன் உணவு பொருட்கள் பற்றாக்குறையின் காரணமாக அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். நாம் புரோட்டீன் உணவுப் பயிர்களை அதிகம் விளைவிப்பதில்லை. புரோட்டீன் உணவு பயிர்களை நாம் ஊடுபயிராக தோட்டங்களில் விளைவிக்க வேண்டும்.
பண்ணை பள்ளிகள்

கிராம அளவில் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதில் முன்னோடியாக இருக்கக் கூடிய விவசாயி ஒருவர் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறைகளை விளக்குவதற்காக பண்ணை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப 6 பண்ணைப் பள்ளி வகுப்புகள் வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 25 விவசாயிகள் பங்கு பெறுவார்கள்.

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை விவசாயிகள் தங்கள் வயலில் செயல்படுத்தி அனுபவம் பெறுவதோடு கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு பின்பற்றி ஏதுவாக செயல் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆல்பர்ட் ராபின்சன், சீனி ராஜ், லதா மகேஷ், ஒன்றியக் குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் ஜெயராம சவுந்தரி, சசிகுமார், பரமசிவம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்