5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருவாரூர் மாவட்டத்தில் 870 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகிற 27-ந்தேதி ஒரே தவணையாக வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 870 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகிற 27-ந்தேதி ஒரே தவணையாக வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரே தவணையாக
தமிழக அரசின் தீவிர போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 14 ஆயிரம் 984 குழந்தைகளுக்கு அனைத்து துறை ஒத்துழைப்புடன் போலியோ சொட்டு மருந்து ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளது. முகாமில் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், முகாம் தேதி அன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்து பயன் அடையலாம்.
870 மையங்கள்
இத்திட்டத்திற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் 800 சிறப்பு மையங்களும், நகர்ப்புறங்களில் 70 சிறப்பு மையங்களும் ஆக மொத்தம் 870 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், நகராட்சி மகப்பேறு நிலையங்கள், சத்துணவு கூடங்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது.
போலியோ சொட்டு மருந்து
இத்திட்டத்திற்கான இப்பணியில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் மேம்பாட்டு திட்டப்பணியாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 3,598 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மையங்களுக்கு தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.