மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் சாவு
திருவள்ளூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
மெக்கானிக்
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 55). இவர், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இரு சக்கர வாகன மெக்கானிக்கான பச்சையப்பன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் மணவாளநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர் வெங்கத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாட்டு வண்டி ஒன்று வந்தது.
சாவு
இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக மாட்டுவண்டி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.