ஆசிரம நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர் தர்ணா போராட்டம்
நாட்டு வைத்தியர் ஆசிரம நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஹேமமாலினி (வயது 20) திருவள்ளூர் அருகே தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டதால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வரும் நாட்டு வைத்தியர் முனுசாமி(50) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரமத்தில் தங்கி இருந்த ஹேமமாலினி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ஹேமமாலினியின் பெற்றோர் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவி ஹேமமாலினி சாவுக்கு வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்திவரும் முனுசாமிதான் காரணம் என்று குற்றம் சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் கழகத்தினர் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மண்டல தலைவர் எல்லப்பன், சென்னை மண்டல செயலாளர் கோபால், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் மோகனவேல், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் கட்சிகள் குழு தலைவர் சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.