மனித உரிமைகள் மீறாமல் கைதிகளை நடத்த வேண்டும் டிஐஜி பேச்சு
அவசர காலங்களில் மனித உரிமைகள் மீறாமல் கைதிகளை நடத்த வேண்டும் என்று ஆப்காவில் நடந்த பயிற்சி முகாமில் வேலூர் சரக போலீஸ் டிஐஜி ஆனிவிஜயா கூறினார்.
வேலூர்
அவசர காலங்களில் மனித உரிமைகள் மீறாமல் கைதிகளை நடத்த வேண்டும் என்று ஆப்காவில் நடந்த பயிற்சி முகாமில் வேலூர் சரக போலீஸ் டிஐஜி ஆனிவிஜயா கூறினார்.
3 நாட்கள் பயிற்சி முகாம்
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்த 40 ஜெயில் அலுவலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆப்காவில் தொடங்கியது.
தொடக்க விழாவிற்கு ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜெயிலுக்கு வரும் கைதிகளில் பெரும்பாலானோர் சமூக சூழ்நிலை மற்றும் குடும்பசூழல் காரணமாக குற்றங்கள் புரிந்துள்ளனர். அவர்கள் கைதி என்ற மனநிலையுடன் தான் ஜெயிலுக்கு வருகிறார்கள்.
குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர்கள் ஜெயிலுக்குள் தனிமையில் இருப்பதை போன்று உணர்கின்றனர். வழக்கு தொடர்பாக அவர்களை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போதும், தீர்ப்புகள் அறிவிக்கப்படும் போதும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடக்கிறது.
மனித உரிமைகள் மீறாமல்
கைதிகள் ஜெயிலில் தனிமையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசவும், நேரில் சந்திக்கவும் அனுமதி அளிப்பது அவசியம். இதன்மூலம் தற்கொலை முயற்சி சம்பவங்களை தடுக்கலாம். தவறு செய்வது மனித இயல்பு.
ஜெயிலுக்குள் வருபவர்களை மனிதர்களாக நடத்த வேண்டும். இனி அவர்கள் குற்றம் செய்யாதவாறு திருத்த வேண்டும். அவசர காலங்களில் கைதிகள் மீது மனித உரிமைகள் மீறாமல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.ஐ.ஜி. கூறினார்.
பயிற்சி முகாமில் சட்ட ரீதியான உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் குறித்து ஜெயில் அலுவலர்களுக்கு அளிக்கப்பட உள்ளது என்று ஆப்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.