1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வேலூர் மாவட்டத்தில் 130345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 27ந் தேதி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 1,30,345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 27-ந் தேதி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டீன் செல்வி, வேலூர் மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1,30,345 குழந்தைகளுக்கு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட 934 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும், போக்குவரத்து வசதி குறைவாக காணப்படும் மலைப்பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடு
அண்டை மாநிலங்கள் மற்றும் பிறமாவட்டங்களில் இருந்து வேலை மற்றும் வியாபாரம் நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் தங்கி சாலை விரிவாக்கம், மேம்பாலம், கட்டுமான பணிகள், பொம்மை விற்பனை செய்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணியில் பொதுசுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும், 116 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுகின்றனர்.
பச்சிளங்குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து அவசியம் போட்டு கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஏற்கனவே சொட்டுமருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இந்த முறையும் கட்டாயம் போட வேண்டும். போலியோ சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானதாகும்.
அதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. பெற்றோர்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை முகாமிற்கு அழைத்து சென்று சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.