சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள்
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மார்ச் 1-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அதன்படி வருகிற மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று, வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்கிறார்கள். 3-ந்தேதி சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் ‘முன்னேற்றத்தின் முகவரி முதல்வர்’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.
தொடர் நிகழ்ச்சிகள்
5-ந்தேதி சோழிங்கநல்லூர் ஜி.பி.ஜனராஜன் திருமண மண்டபத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கருத்தரங்கமும், 7-ந்தேதி வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் ‘சங்கத்தமிழ் ஈன்ற புறநானூறு’ என்ற தலைப்பில் இசையரங்கமும், 9-ந்தேதி மேட்டுக்குப்பம் காலனி எஸ்.பி.பி. கார்டன் பகுதியில் ‘தமிழகத்தின் தலைநிமிர்வு’ என்ற தலைப்பில் மகளிர் அரங்கமும், 11-ந்தேதி நீலாங்கரை அண்ணாதிடலில் ‘தனக்குவமை இல்லாத தலைவர்’ என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவர்கள் அரங்கமும் நடைபெறுகிறது.
13-ந்தேதி கோயம்பேடு ஏ.எம்.வி.பள்ளி வளாகத்தில் ‘இந்தியா வியக்கும் ஈடில்லா முதல்வர்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளர் அரங்கம், 15-ந்தேதி மேடவாக்கம் ஜே.எஸ்.கிராண்ட் பேலஸில் ‘மக்களின் மகிழ்ச்சி மாநில வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடிகர்கள் அரங்கம், 17-ந்தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் ‘விடியல் வானம் வெல்லும் தலைவர் தளபதி’ எனும் தலைப்பில் தமிழறிஞர்கள் அரங்கம், 19-ந்தேதி கோயம்பேடு ஏ.எம்.வி.பள்ளி வளாகத்தில் சாலமன் பாப்பையா தலைமையில் ‘மக்கள் மனதில் இடம்பிடிக்க பெரிதும் உதவுவது தீரமே, ஈரமே... என்ற தலைப்பில் பட்டிமன்றம், 21-ந்தேதி பெருங்குடி கலைஞர் திடலில் சின்னத்திரை நடிகர்களின் பாட்டு பட்டிமன்ற உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.