தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக கருத்து: மந்திரி ஈசுவரப்பாவுக்கு, ஜே.பி.நட்டா கண்டிப்பு

தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக சர்ச்சையாக பேசிய மந்திரி ஈசுவரப்பாவை, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டித்துள்ளார்.

Update: 2022-02-23 21:27 GMT
பெங்களூரு:

தேசிய கொடி அவமதிப்பு

  கர்நாடகத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக இருந்து வருபவர் ஈசுவரப்பா. இவர், ஹிஜாப் விவகாரத்தில் கருத்து கூறும் போது, டெல்லி செங்கோட்டையில் ஒருநாள் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றப்படும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருந்தார். இதனால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி, காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டமும், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  அத்துடன் மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதால், சபையை 3 நாட்களுக்கு முன்பாகவே சபாநாயகர் காகேரி முடித்து விட்டார். தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக மந்திரி ஈசுவரப்பா பேசியது, பா.ஜனதா கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதுபற்றி பா.ஜனதாவின் மேலிட தலைவர்களுக்கும் சென்றது. இதையடுத்து, மந்திரி ஈசுவரப்பாவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடர்பு கொண்டு பேசினார்.

ஜே.பி.நட்டா கண்டிப்பு

  அப்போது, ‘‘பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நீங்கள். தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக பேசி இருப்பது கட்சிக்கு பின்னடைவையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது. தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக பேசி இருப்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இதுபோன்ற கருத்துகளையும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமான கருத்துகளையும் பேசி, கட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டாம்’’ என்று கூறினார். தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக எந்த கருத்துகளையும் பேசக்கூடாது என்று ஈசுவரப்பாவுக்கு ஜே.பி.நட்டா கண்டிப்புடன் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மந்திரி ஈசுவரப்பா, ஜே.பி.நட்டா பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஆவார். அவர் கூறிய கருத்துகளையும், உத்தரவுகளையும் பின்பற்றி நடப்பேன். அது எனது கடமையாகும். பா.ஜனதா கட்சியின் சாதாரண தொண்டனாக இருந்து, தேசிய தலைவர் கூறிய ஒவ்வொரு உத்தரவையும் பின்பற்றுவேன். நான் கூறிய கருத்துக்கு ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி மாதுசாமி சட்டசபையில் உரிய விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை, என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்