மணல் அள்ள பயன்படுத்திய எந்திரம் பறிமுதல்
காரியாபட்டி அருகே மணல் அள்ள பயன்படுத்திய எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரியாபட்டி,
திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குண்டாற்று படுகையில் ஆற்றுமணல் அனுமதியின்றி அள்ளப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் திருச்சுழி அருகே உள்ள உடையனேந்தல் குண்டாற்று படுகையில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாக திருச்சுழி தாசில்தார் முத்துக்கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் முத்து கிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை தாசில்தார் சிவனாண்டி தலைமையிலான வருவாய்த்துறையினர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையனேந்தல் குண்டாற்று பகுதியில் அனுமதியின்றி டிப்பர் லாரியில், ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். வருவாய்த்துறையினரை கண்டவுடன் மணல் அள்ளிய நபர்கள் லாரியோடு தப்பி விட்டனர். இதனையடுத்து வருவாய்துறையினர் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட எந்திரத்தை திருச்சுழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குச்சம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.