வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் அறைகள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் அறைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் அறைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அறைகள் புதுப்பிக்கும் பணி
வேலூர் மாநகராட்சி 60 வார்டு கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க 7 இடங்களையும், சுயேச்சை 6 இடங்களிலும், பா.ம.க., பா.ஜ.க. தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு வருகிற 2-ந் தேதி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மேயர், துணை மேயர் அறைகளும் புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. மேயர் பயன்படுத்தும் செங்கோலையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறைமுக தேர்தல்
இதுதவிர மாநகராட்சி அலுவலக கட்டிடம் முழுவதும் புதிதாக வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் அங்கு புதிதாக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி காலை பதவி ஏற்கின்றனர். இதனைத் தொடர்ந்து 4-ந் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கவுன்சிலர் கூட்டரங்கு புதுப்பொலிவுடன் மாற்றப்படுகிறது. மேலும் மேயர், துணை மேயர் அறைகளும் தயார் செய்யப்படுகின்றன. மாநகராட்சி கட்டிடம் முழுவதும் வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. 2-ந் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகம் புத்தம் புதிதாக பளிச்சென காட்சியளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.