காரைக்குடி
அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி காரைக்குடி அருகே கல்லலில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
காரைக்குடி அருகே உள்ளது கல்லல். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் தங்களது மேல்படிப்பிற்காக இங்கு வந்து படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், பள்ளியில் தேங்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சாலைமறியல்
இந்நிலையில் நேற்று இந்த பள்ளிக்கு வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் சாலை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் கல்லல் போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பின்னர் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், கல்லல் ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறியதாவது:-
கல்லல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் இங்கு வந்து படித்து செல்கிறோம். பள்ளியில் போதிய அளவிலான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மிகவும் பழுதான நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுதவிர பள்ளி முன்பு தேங்கும் குப்பைகளை சரிவர துப்புரவு பணியாளர்கள் அள்ளாததால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை உள்ளது. நீண்ட நாட்களாக இந்த பிரச்சினைகளை சரிசெய்யாததால் பலவகையில் கஷ்டங்களை சந்தித்து வந்தோம். தற்போது இந்த போராட்டம் மூலம் தீர்வு கண்டுள்ளோம். இந்த பிரச்சினைகள் நிரந்தரமாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.