வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-02-23 18:48 GMT
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டம், கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 26). இவருக்கும், அரியலூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நெருங்கி பழகினார். இதில், அப்பெண் கர்ப்பமானார். அப்போது அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாண்டியனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவர் பற்றி விசாரித்தபோது பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது தெரிய வந்தது.  இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் கடந்த 2018-ம் ஆண்டு விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பாண்டியனை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பெண்ணை கர்ப்பமாக்கிய பாண்டியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். தற்போது அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்து 3 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்