தினத்தந்தி புகார் பெட்டி

பொதுமக்கள் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-02-23 18:21 GMT

 பராமரிக்காமல் கிடக்கும் ரெயில் நிலையம்

  வேலூர் வழியாக இயக்கப்படும் விழுப்புரம்-திருப்பதி பாசஞ்சர் ரெயில் பல மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் விழுப்புரம்-திருப்பதி மார்க்கத்தில் பல ரெயில் நிலையங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. ரெயில் நிலைய மேடையில் முட்புதர்கள், செடி, கொடி, புல் ஆகியவை வளர்ந்துள்ளன. விஷ உயிரினங்கள் நடமாட்டமும் உள்ளன. ரெயில் நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கட்டிடங்கள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன. அதில் குறிப்பாக வேலூர் டவுன் ரெயில் நிலையம் பராமரிக்காமல் உள்ளது. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மதுபானத்தைக் குடித்து விட்டு காலிப்பாட்டில்களை நடைமேடையிலேயே போட்டு உடைக்கிறார்கள். ரெயில்வே நிர்வாகம் கூலியாட்களை வைத்து ரெயில் நிலையங்களை பராமரிக்க வேண்டும்.
  -பி.முத்துராஜ், சமூக ஆர்வலர், வளத்தூர்.

யூரியா தட்டுப்பாடு

  காட்பாடி பகுதியில் உள்ள வள்ளிமலை, போடிநத்தம், பொன்னை, விண்ணம்பள்ளி, சேர்க்காடு, குப்பிரெட்டித்தாங்கல், இளையநல்லூர் உள்பட பல கிராமங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு மூட்டை யூரியா ரூ.280-க்கு விற்றது. தற்போது ரூ.350-க்கு விற்றாலும் யூரியா கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -பி.துரை, கல்புதூர்.

 நச்சுப்புகையால் மக்கள் அவதி

  வேலூர் மாநகராட்சி 51-வது வார்டில் சாய்நாதபுரம் சுடுகாடு அருகில் திடக்கழிவு மேலாண்மை நிலையம் உள்ளது. இது, சபாபதிநகர் பூங்காவுக்கு சொந்தமானதாகும். அங்கு 20 பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அங்கு குப்பைகள் பிரிக்கப்பட்டு வேண்டாத கழிவுகள் தீ வைக்கப்படுகிறது. இதனால் நச்சுப்புகை வெளியேறி அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். அங்கு மருத்துவக் கழிவுகளும் எரிக்கப்படுகிறது. அப்பகுதியில் நச்சுப்புகையின் நாற்றம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. குப்பைகள் எரிக்கப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.
  -ஜி.ராமதாஸ், வேலூர்.

கூடுதல் பஸ்களை இயக்க ேவண்டும்

  வெறையூர் பகுதியில் இருந்து 100-க்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் பஸ்கள் வராததால் மாணவ-மாணவிகள் நடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. பள்ளிக்குச் செல்லும் நேரம், வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு வரும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -நாதன், வெறையூர்.

மேலும் செய்திகள்