தி.மு.க.வுக்கு 20 சதவீத வாக்கு வங்கி அதிகரித்துள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு 20 சதவீத வாக்கு வங்கி அதகரித்துள்ளது என்று மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
மயிலாடுதுறை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு 20 சதவீத வாக்கு வங்கி அதகரித்துள்ளது என்று மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
வேட்பாளர்களுக்கான சந்திப்பு கூட்டம்
மயிலாடுதுறை நகராட்சியில் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
234 தொகுதியிலும் நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் சட்டசபை தேர்தலைவிட உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசின் செயல்பாடுகளால் 20 சதவீதம் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இது கடந்த 9 மாத கால ஆட்சியில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதி உட்பட 234 தொகுதியிலும் நலத்திட்ட உதவிகளை கொண்டு சேர்த்ததோடு, தொடர்ந்து வளர்ச்சி பணிகளையும் தமிழக முதல்-அமைச்சர் செய்து வருகிறார்.
அதனால்தான் தி.மு.க.விற்கு 20 சதவீத வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிக்கின்ற நிலையில், அவர் பிரதமராக இருந்தாலும் வாக்குவங்கி உயரவில்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
வளர்ச்சி பணிகள்
அதன் வெளிப்பாடாகத்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் மாபெரும் வெற்றியை தந்துள்ளனர். தி.மு.க. வெற்றி பெற்ற பகுதி மட்டுமின்றி மாற்றுக்கட்சியினர் வெற்றி பெற்ற பகுதிக்கும் பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை பகுதி மக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாளசாக்கடை கழிவுநீர், குப்பைகள் மேம்படுத்துதல், குடிநீர், சாலை, தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும் நல்லமுறையில் செய்துகொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெகவீரபாண்டியன், சத்தியசீலன், அரசு வக்கீல் ராம.சேயோன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சிவதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.