பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி

நல்லத்துக்குடியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

Update: 2022-02-23 17:12 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் பெருமாள்கோவில் வடக்கு தெருவில் இருந்து கலைஞர் காலனி, அம்பேத்கர் தெரு வழியாக நடுத்தெரு வரை 1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. இந்த புதிய சாலை அமைக்கும் பணிக்காக கடந்த மாதம் 8-ந் தேதி பெருமாள் கோவில் வடக்கு தெருவில் இருந்து நடுத்தெரு வரை பழைய சாலை கொத்தி பெயர்த்து போடப்பட்டது.    அதன்பிறகு தற்போது வரை பணி நடைபெறவில்லை. சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அதில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று நல்லத்துக்குடி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்று  ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகமணி மற்றும் பொதுமக்கள் தயாராக இருந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜகுமார் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்த இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்