மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசி, பொருளாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒருமுறையும், மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தை 2 மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையிலும், மாதந்தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும் நடத்த வேண்டும், அடிப்படை வசதியின்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு கொடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும், தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாமை நடத்தும்போது முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் பற்றிய விவரங்களை தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை கண்டுகொள்ளாமல் பணியாற்றி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
கலெக்டர் பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்ததும் அவர்களில் குறிப்பிட்ட சிலரை அழைத்து கலெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை (அதாவது இன்று) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓரிரு நாளில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாகவும், மற்ற கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என்றும் கலெக்டர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள், மதியம் 2.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.