கூட்டத்துக்கு தயாராகும் நகர்மன்ற அரங்கு
பொள்ளாச்சியில் நகர்மன்ற அரங்கு கூட்டத்துக்கு தயாராகி வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நகர்மன்ற அரங்கு கூட்டத்துக்கு தயாராகி வருகிறது.
பொள்ளாச்சி நகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பொள்ளாச்சி நகராட்சியில் 30 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வும் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பொள்ளாச்சி நகராட்சியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்க உள்ளனர். அவர்கள் நகராட்சி தலைவர், துணை தலைவரை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்ட அரங்கு
இந்த நிலையில் நகராட்சி மன்ற கூட்டரங்கை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டதும் புதிய கட்டிடத்தில் மன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம், புதிய கட்டிடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள், அலுவலர்கள் புதிய கட்டிடத்திற்கு மாறிய நிலையில் நகராட்சி தலைவர் அறை, கூட்டரங்கு பயன்படுத்தப்படாமல் கிடந்தது.
தயார்படுத்தும் பணி
இதற்கிடையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இதை தொடர்ந்து நகராட்சி மன்ற கூட்ட அரங்கை தயார்ப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மைக் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி தலைவருக்கான இருக்கை, துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட உள்ளன. மேலும் நகராட்சி தலைவர் அறையும் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.