ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி, அதை கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடுப்புணி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜ், பாரதநேரு மற்றும் போலீசார் நடுப்புணி ரோட்டில் ரோந்து சென்றனர்.
1 டன் ரேஷன் அரிசி
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபர் போலீசார் நிற்பதை பார்த்தார். பின்னர் உடனே மொபட்டை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் அங்கு வந்து மொபட்டில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மொபட்டுடன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
வலைவீச்சு
பின்னர் அரிசியை பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர் மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த ஆதி ஈஸ்வரன் என்பது தெரியவந்தது. இதுபற்றிய புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆதி ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.