ரெயிலில் தப்பிய வடமாநில கொள்ளையர்கள்
ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு 150 பவுன் நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் ரெயிலில் தப்பியது தெரியவந்தது.
திண்டுக்கல்:
டாக்டர் தம்பதி வீட்டில் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டாக்டர் தம்பதி சக்திவேல்-ராணி. இவர்கள் வீட்டின் அருகே மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோரும் வசிக்கின்றனர். கடந்த 14-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
அதில் சக்திவேலின் தந்தை சென்னியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவாவில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே தூங்கிய சென்னியப்பனை கட்டி போட்டு விட்டு, கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
மேலும் வீட்டுக்குள் தூங்கிய டாக்டர் தம்பதி உள்பட 3 பேரையும் கொள்ளையர்கள் கட்டி போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு, சக்திவேலின் காரில் 4 பேரும் தப்பி சென்று விட்டனர். மேலும் அந்த காரை கொடைரோடு அருகே நிறுத்தி விட்டு நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
ரெயிலில் தப்பிய கொள்ளையர்கள்
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் டாக்டர் சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் டாக்டர் குடும்பத்தினரை மிரட்டிய போது கொள்ளையர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியது தெரியவந்தது. இதனால் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
மேலும் கொள்ளையர்கள் காரை நிறுத்தி விட்டு சென்ற இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டது.
அப்போது மோப்பநாய் அங்கிருந்து ஓடி ரெயில் தண்டவாளம் அருகே நின்று விட்டது. இதனால் கொள்ளையர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொடைரோடு அல்லது திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயிலில் ஏறி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
12 தனிப்படையினர் விசாரணை
இதன்மூலம் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர்.
அதேநேரம் ஒட்டன்சத்திரம் பாணியில் தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தது. ஆனால் 6 கொள்ளை சம்பவங்களிலும் கொள்ளையர்கள் குறித்து இதுவரை துப்புதுலங்கவில்லை என்பது ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கொள்ளையர்கள் நல்ல வசதி படைத்தவர்களின் வீடுகளை கண்காணித்து திட்டமிட்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல், மதுரை, திருச்சியில் இருந்து வடமாநிலங்களுக்கு தப்பி இருக்கலாம் என்பதால், ரெயில் நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.