மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது, கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் பலத்த காயமடைந்தார்

Update: 2022-02-23 16:12 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது, கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் பலத்த காயமடைந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்கள்
நெல்லை வண்ணாரப்பேட்டை பரணியூர் முத்தமிழ் தெருவை சேர்ந்த சின்னக்காளை மகன் தேவநாதன் (வயது22). தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (37). இவர்கள் 2 பேரும் நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.
இந்த 2 பேரும் நேற்று மாலையில் கம்பெனி வேலையாக உடன்குடி சென்றனர். அங்கு வேலைைய முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் காயாமொழி வழியாக திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர். 
கார் மோதியது
அப்போது காயாமொழியை தாண்டியவுடன் எதிரே வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைப்பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டனர். 
ஒருவர் சாவு
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். தேவநாதன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்