குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அம்மாபேட்டை காவிரி ஆறு மூலம் தண்ணீர் ஏற்றி அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தினமும் காலை 6 மணிக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ஆற்று தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் பவானி-வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ஒலகடம் அருகே குட்டைமேடு பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக்கோரி...
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்களுக்கு ஆற்று குடிநீர் போதுமானதாக இல்லை என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு ஆற்று குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் அவதிப்பட்டு் வருகிறோம். உடனே எங்கள் பகுதியில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பவானி-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.