சேலம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 47-ல் வெற்றி பெற்று தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
சேலம்:-
சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 47-ல் வெற்றி பெற்று தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
மாநகராட்சி தேர்தல்
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகளுக்கு கடந்த 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. 48 வார்டுகளில் போட்டியிட்டது. மேலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 5 வார்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனால் அந்தந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முக்கியமாக இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டதால் 60 வார்டுகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதுதவிர பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. இதற்கிடையில் பல சுயேச்சைகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டது.
தீவிர பிரசாரம்
சேலம் மாநகராட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.வினரும், ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதால் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க.வினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இதேபோல் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் பிரசாரம் செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை
கடந்த 19-ந் தேதி சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கான தேர்தல் 709 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் 64.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை நடைபெற்றது.
இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் காலை8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டாக எண்ணி முடிக்கும் போதும் தி.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்று வந்தனர். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. 47 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி வாகை சூடியது. அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்..
இதனிடையே சேலம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியதால் புதிய மேயராக பதவி ஏற்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சியினரிடையே ஆர்வத்தை தூண்டி உள்ளது.
நகராட்சி, பேரூராட்சி
இதே போல மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், இடங்கணசாலை ஆகிய நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. தாரமங்கலம் நகராட்சியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 25 பேரூராட்சிகளை தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது. 1 பேரூராட்சியில் (வனவாசி) அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 5 பேரூராட்சிகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இழுபறி நிலை நீடிக்கிறது.