உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அறந்தாங்கி நகராட்சியில் பதிவான வாக்குகள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆரவாரம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு வாக்கு எண்ணிக்கைக்காக 10 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 10 வார்டுகளாக சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன. நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் பெயர் அறிவிக்கும் போது அவர்களது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து கைத்தட்டி மகிழ்ந்தனர். இதேபோல மையத்தில் வெளியே ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து, டிரம்ஸ் அடித்து கொண்டாடினர்.
தி.மு.க. வெற்றி
வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே மற்றும் வெளிப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் பணிகளை கலெக்டர் கவிதாராமு மற்றும் தேர்தல் பார்வையாளர் டாக்டர் மோனிகா ராணா ஆகியோர் பார்வையிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.