காங்கிரஸ் தொடர் தர்ணா போராட்டம் எதிரொலி; கர்நாடக சட்டசபை முன்கூட்டியே நிறைவு

காங்கிரஸ் கட்சியின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. சட்டசபை கூட்டத்தை வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார்.

Update: 2022-02-22 21:17 GMT
பெங்களூரு:

காங்கிரஸ் தர்ணா

  கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 25-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கூட்டத்தில் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். முதல் 2 நாட்கள் மட்டுமே சபை சுமுகமாக நடைபெற்றது. அதன் பிறகு 16-ந் தேதியில் இருந்து காங்கிரஸ் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. தேசிய கொடிக்கு அவமரியாதை இழைத்ததால் மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தர்ணா நடத்தி வந்தது.

  இதனால் கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் முழுமையாக முடங்கின. சபையை நடத்த சபாநாயகர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 17-ந் தேதி முதல் காங்கிரசார் சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சபாநாயகர் காகேரி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் சட்டசபைக்கு வந்து சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஈசுவரப்பாவை நீக்கும் வரை தாங்கள் இந்த தர்ணாவை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஜனநாயகத்திற்கு பாதிப்பு

  இந்த நிலையில் சபாநாயகர் காகேரி நேற்று சட்டசபையில் இந்த கூட்டத்தொடரை நிறைவு செய்யும் முன்பு பேசியதாவது:-

  சட்டசபை கூட்டத்தொடரை 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களாக சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இன்னும் 3 நாட்கள் கூட்டம் நடைபெற வேண்டியுள்ளது. நீங்கள்(காங்கிரசார்) இருக்கைக்கு திரும்புங்கள். இந்த 3 நாட்கள் பயனுள்ள வகையில் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்.

  நீங்கள்(காங்கிரசார்) இவ்வாறு தர்ணா நடத்தினால் என்னால் சபையை சரியான முறையில் நடத்த முடியாது. இந்த சபையை நடத்த நான் 6 முறை சமாதான கூட்டத்தை நடத்தினேன். இதில் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் சுமுக தீர்வு கிடைக்கவில்லை. நீங்கள்(காங்கிரசார்) இருக்கைக்கு திரும்பினால் நான் இன்னும் 3 நாட்கள் சபையை நல்ல முறையில் நடத்துவேன். 

இல்லாவிட்டால் சபையை ஒத்திவைக்க வேண்டி வரும். ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் பேச தயாராக உள்ளனர். ஆனால் நீங்கள் எனது வேண்டுகோளையும் ஏற்கவில்லை. அதனால் சபையை வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி ஒத்திவைக்கிறேன்.
  இவ்வாறு காகேரி பேசினார்.

அமைதியை கெடுக்க முயற்சி

  முன்னதாக பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ‘‘கர்நாடகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதுகுறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. ஹிஜாப் பிரச்சினையால் பள்ளி-கல்லூரிகளில் குழந்தைகள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இங்கு அதுபற்றி விவாதித்து ஒரு நல்ல தகவலை குழந்தைகளுக்கு தெரிவிப்போம். சிவமொக்காவில் இந்து அமைப்பின் பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதுபற்றி இங்கு பேச வேண்டியுள்ளது. அதனால் நீங்கள்(காங்கிரசார்) இருக்கைக்கு திரும்புங்கள். சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த எதிர்க்கட்சிக்கும் பங்கு உள்ளது. சபையை ஒத்திவைப்பது குறித்து நீங்கள் (சபாநாயகர்) முடிவு எடுக்கலாம்’’ என்றார்.

  அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர்,‘‘காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி இல்லை. எங்கள் கட்சியில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்களும் எதிர்க்கட்சியே. அதனால் இங்கு எங்களை பேச அனுமதிக்க வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. அதனால் எங்களுக்கு பேச வாய்ப்பு தாருங்கள்’’ என்றார்.

  கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 25-ந் தேதி நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்கள் முன்கூட்டியே கூட்டம் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்