புகார் பெட்டி
வேகத்தடை வேண்டும்
கவுந்தப்பாடி பஸ் நிலையம் அருகே பவானி, அந்தியூர், சத்தி ஆகிய 3 இணைப்பு சாலைகள் உள்ளது. இதனால் அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ரோட்டை பொதுமக்கள் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே 3 இணைப்பு ரோடு பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கவுந்தப்பாடி.
சுகாதாரக்கேடு
கோபி புகழேந்தி வீதியில் உள்ள ஒரு இடத்தில் குப்பை மற்றும் மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதும், சுகாதாரக்கேடும் நிலவுகிறது. மேலும் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் மதுபாட்டில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
புழுதி பறக்கும் சாலை
ஈரோடு சத்தி ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. இதன் காரணமாக 4 சக்கர வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ள இடத்தில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்க வேண்டும்.
மோனிஷா, ஈரோடு.
புதர் மண்டி காணப்படும் பூங்கா
கோபி டவுன் சக்தி சாந்தி நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. காலை, மாலை இரு வேளைகளிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பூங்காவுக்கு வருவது வழக்கம். தற்போது இந்த பூங்காவில் செடிகள் வளர்ந்தும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் புதருக்குள் விஷ சந்துக்கள் பதுங்கி இருந்தாலும் தெரியாது. இதன்காரணமாக சிறுவர்கள் பூங்காவுக்கு அழைத்து பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பூங்காவில் வளர்ந்து இருக்கும் செடிகளையும், புதர்களையும் வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பை
பவானிசாகர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் முன் தெற்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து முகாமில் உள்ள வீடுகளில் வந்து விழுகிறது. எனவே குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானிசாகர்.
சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு காளைமாட்டு சிலையில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் பகுதியில் ரெயில்வே நுழைவு மேம்பாலம் உள்ளது. அங்கு பாலத்தின் கீழ் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. இதனால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மோசமான சாலையை அகற்றிவிட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கல்பனா, ஈரோடு.
ஜல்லி கற்களை அகற்ற வேண்டும்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் புதுப்பாளையம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டின் ஓரத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டில் கொட்டப்பட்டு உள்ள ஜல்லி கற்கனை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர்.