கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் முடிவை அறிவிக்க காலதாமதம்; அ.தி.மு.க. வேட்பாளர், முகவர்கள் திடீர் போராட்டம் ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் தேர்தல் முடிவை அறிவிக்க காலதாமதம் செய்ததை கண்டித்து அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அவர்களின் முகவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-22 21:10 GMT

கள்ளக்குறிச்சி, 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 வார்டுகளை கொண்ட கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தச்சூர் பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் 3-வது சுற்றில் 11-வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 11.30 மணிக்கு முடிவடைந்தது. 

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பாபு 611 வாக்குகள், தி.மு.க. வேட்பாளர் சர்புதீன் 607 வாக்குகள் பெற்று இருந்தனர். தி.மு.க. வேட்பாளரை விட அ.தி.மு.க. வேட்பாளர் பாபு 4 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். ஆனால் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு அதிகாரிகள் கால தாமாதம் செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதனால் அ.தி.மு.க.வினர் தேர்தல் முடிவை உடனே அறிவிக்கும்படி கூறினர். அப்போது தி.மு.க.வினர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அ.தி.மு.க. வேட்பாளர் பாபு மற்றும் அவரது முகவர்கள் 2 பேரையும் வாக்கு எண்ணும் அறையை விட்டு வெளியேற்றினர். அப்போது அவர்கள் தேர்தல் முடிவை உடனே அறிவிக்கக்கோரி வாக்கு எண்ணும் அறையின் நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக

இதைபார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சற்று தொலைவில்கொண்டு விட்டனர். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் பாபு, தி.மு.க.வினர் மட்டும் வாக்கு எண்ணும் அறையின் உள்ளே நிற்கிறார்கள். நாங்கள் மட்டும் வெளியே நிற்பதா என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு மீண்டும் வாக்கு எண்ணும் அறைக்குள் சென்றனர்.

அங்கு தடுப்பு வேலியின் முன்பு அமர்ந்து தேர்தல் முடிவை அறிவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினரும் தரையில் அமர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

பின்னர் பகல் 1.10 மணிக்கு 11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பாபு 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் பாபு மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

இந்த நிலையில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டனர். தேர்தல் முடிவை அறிவிக்க தாமதம் செய்ததை கண்டித்தும், அ.தி.மு.க.வேட்பாளர் பாபுவின் வெற்றியை அறிவிக்கக்கோரியும் சேலம்-சென்னை 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

கைது

இதையறிந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக்ராஜா தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 32 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை தாமதம்

11-வது வார்டுக்கான தேர்தல் முடிவை அறிவிக்க காலதாமதம் ஆனதால் 12-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை 1¾ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மேலும் செய்திகள்