கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சி்களை தி.மு.க. கைப்பற்றியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-02-22 21:04 GMT

கள்ளக்குறிச்சி, 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 522 பேர் போட்டியிட்டனர். இதில் 56,351 ஆண் வாக்காளர்கள், 61,186 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேர் என மொத்தம் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

தி.மு.க. வெற்றி

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. வேட்பாளர்களின்  வெற்றியை அறிவித்ததும் கட்சியினர், ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்