நெல்லை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நெல்லை மாநகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது

Update: 2022-02-22 20:52 GMT
  நெல்லை:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நெல்லை மாநகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது. கொரோனா காரணமாக முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மேளதாளம் முழங்க அழைத்து செல்லப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி, சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி, அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன.
நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர் நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் `சீல'் உடைக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.
விறுவிறுப்பு
முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகளை பிரித்து எண்ணும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர். ஓட்டு எண்ணிக்கொண்டிருந்த போதே காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி ெதாடங்கியது. அங்கு போடப்பட்டிருந்த 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது மேஜைகளை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வலைப்பகுதிக்கு வெளியே முகவர்கள் நின்றிருந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது. சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, முன்னிலை பெற்ற கட்சிகளின் முகவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
முகவர்களுக்கு கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வருவதற்காக மண்டலங்கள் வாரியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக அவர்கள் வரிசையாக வந்தனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
செல்போன், பீடி, சிகரெட், தீப்பெட்டி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. உள்ளே சென்றவர்களை சமூக இடைவெளியுடன் நிறுத்தி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கைகளில் சானிடைசர் திரவமும் தெளிக்கப்பட்டது.
1,200 போலீசார்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த வேட்பாளர்கள், முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகம் மற்றும் அதன் எதிரே உள்ள காலி இடங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு நடந்தே வந்தனர்.
இந்த வாக்கு எண்ணிக்கையையொட்டி சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர ஏற்கனவே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரும் தொடர்ந்து பணியாற்றினர்.
மேளதாளம் முழங்க
வெற்றி பெற்று சான்றிதழ் பெற்று சென்றவர்களை கட்சியினர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வாக்கு எண்ணிக்கையையொட்டி நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி பகுதியில் ஒரே மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்