தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னிமலை பேரூராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. வேட்பாளர்கள் 13 வார்டுகளிலும், கூட்டணி கட்சியான ம.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 15-வது வார்டில் மட்டும் அ.தி.மு.க. வென்றுள்ளது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 8 வார்டுகளிலும் தி.மு.க. பெண் வேட்பாளர்களே வென்றனர்.
சென்னிமலை பேரூராட்சியை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிக இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள வார்டு உறுப்பினர்கள் நேற்று சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் தலைமையில் தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, மேற்கு ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி கொடுமணல் கோபால் மற்றும் ஒன்றிய, நகர தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னிமலை பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது