நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒலிபெருக்கி உரிமையாளர் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர் இறந்தார்

Update: 2022-02-22 20:28 GMT
நெல்லை:
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒலிபெருக்கி உரிமையாளர்
நெல்லை அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் திருமலைநம்பி (வயது 37). ஒலிபெருக்கி உரிமையாளர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செங்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (16), செல்வம் (18) ஆகிய 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானது.
பரிதாப சாவு
இதில் பலத்த காயமடைந்த திருமலை நம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
செல்லத்துரை, செல்வம் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லத்துரை, செல்வம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமலை நம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்