தொடர்ந்து 6வது முறையாக செஞ்சி பேரூராட்சியை திமுக தக்கவைத்தது

தொடர்ந்து 6-வது முறையாக செஞ்சி பேரூராட்சியை தி.மு.க. தக்கவைத்தது.

Update: 2022-02-22 18:53 GMT
செஞ்சி, 

செஞ்சி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 22 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தேர்தலில் 17 ஆயிரத்து 817 பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதாவது 74.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 

6-வது முறையாக... 

இதனை தொடர்ந்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்கள் அனைத்தும் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டது. வாக்குகள் அனைத்தும் நேற்று சுற்றுவாரியாக எண்ணப்பட்டன. 17 வார்டுகளில் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். 13-வது வார்டில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் அகல்யா வெற்றிபெற்றார். மற்ற 17 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதன் மூலம் தொடர்ந்து 6-வது முறையாக செஞ்சி பேரூராட்சியை தி.மு.க. தக்க வைத்துள்ளது. 

தலைவர் பதவி யாருக்கு?

கடந்த 5 முறை நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்களே அதிக வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தனர். 5 முறையும் தற்போதைய அமைச்சரான செஞ்சி மஸ்தான், பேரூராட்சி தலைவராக இருந்தார்.
இந்த முறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். எனவே அவர்தான், பேரூராட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்