அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த மண்டபம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
மண்டபம் பேரூராட்சியை தி மு க கைப்பற்றியது
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதி கடந்த 30 ஆண்டுகளுக்குமேல் அ.தி.மு.க. கோட்டையாக இருந்தது. 25 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த தங்க மரைக்காயர் என்பவர் தொடர்ந்து பேரூராட்சி தலைவராக பணியாற்றி வந்துள்ளார். 1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தங்க மரைக்காயர் என்பவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து 1991 முதல் 96 வரை தனி அலுவலர் பேரூராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதைத்தொடர்ந்து 96-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தங்க மரைக்காயர் போட்டியிட்டு 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து தலைவராக பதவி வகித்தார். இந்த நிலையில் தங்க மரைக்காயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கோட்டையாக இருந்த மண்டபம் பேரூராட்சியை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 18 வார்டுகள் கொண்ட மண்டபம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 16 பேரும், அ.தி.மு.க. சார்பில் 16 பேரும், பா.ஜனதா சார்பில் 2 பேரும், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 1 நபரும், தே.மு.தி.க. சார்பில் 1 நபரும், அ.ம.மு.க. சார்பில் 8 பேரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 4 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும், மக்கள் நீதி மையம் சார்பில் ஒருவரும், எஸ்.டி.பி.ஐ. சார்பில் 4 பேரும் சுயேச் சையாக 12 பேரும் என மொத்தம் 66 பேர் போட்டியிட்டனர். இதில் நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. 12 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. ஒரு இடத்தையும், சுயேட்சையாக போட்டி யிட்டவர்கள் 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அ.தி.மு.க. வசம் இருந்த மண்டபம் பேரூ ராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.