வியாபாரி தற்கொலை

வியாபாரி தற்கொலை

Update: 2022-02-22 17:51 GMT
குன்னத்தூர்,
குன்னத்தூரில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி
குன்னத்தூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 37). ஊத்துக்குளி ரோட்டில் தவுட்டு கடை வைத்திருந்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்ட காரணத்தினால் கருப்புசாமியை 2-வது திருமணம் செய்தார்.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கருப்புசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டு கருப்புசாமி வீட்டை விட்டு சென்று விட்டார். உடனே குடும்பத்தினர் அனைவரும் கருப்புசாமியை அக்கம்பக்கம் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்க வில்லை.
தற்கொலை
இந்த நிலையில் அந்த பகுதியில் ஒரு தோட்டத்தில் உள்ள மரத்தில் கருப்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. 
அந்த கடிதத்தில் குன்னத்தூரை சேர்ந்த ஒருவருக்கும் தனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகவும், நான் எவ்வளவோ சொல்லியும் மனைவி கேட்கவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்