தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-02-22 17:42 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
6 நகராட்சிகள்
தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் மொத்தம் 177 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 6 நகராட்சிகளிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 177 வார்டுகளில் 103 இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 45 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., அகில இந்திய பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ம.க. தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 19, அ.தி.மு.க. 7, அ.ம.மு.க. 2, காங்கிரஸ் 2, பா.ஜ.க. 1, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 12, அ.தி.மு.க. 8, அ.ம.மு.க. 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், பா.ம.க. தலா ஒரு இடங்கள், சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 20, அ.தி.மு.க. 9, பா.ஜ.க. 2, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 17, அ.தி.மு.க. 6, ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது.
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 7, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 11, அ.தி.மு.க. 8 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

மேலும் செய்திகள்