மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-22 10:45 GMT
பெயிண்டர்

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பி.வி.காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 22). பெயிண்டரான இவர், யாஸ்வினி (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லோகேஸ்வரன் என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது.

வெங்கடேஷ் தனது மனைவி, குழந்தையுடன் செங்குன்றம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதற்கு முன்பு காட்டூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த அவர், 10 நாட்களுக்கு முன்புதான் செங்குன்றத்தில் குடும்பத்துடன் குடியேறினார்.

கால்பந்து விளையாட்டு

நேற்று முன்தினம் மாலை காட்டூர் அருகே கால்பந்து விளையாடும் போது தவறி விழுந்து வெங்கடேஷ் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வெங்கடேசுடன் இருந்த காட்டூர் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி, ஜீவா, சிராஜ்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் சத்யமூர்த்திக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால் மதியம் காட்டூர் பகுதியில் மின்வாரிய அலுவலகத்தின் அருகே உள்ள மைதானத்தில் சத்யமூர்த்தி, ஜீவா, சிராஜ்சிங் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

அடித்துக்கொலை

பின்னர் சிராஜ்சிங்கை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வெங்கடேஷ், ஜீவா, சத்யமூர்த்தி ஆகிய 3 பேர் மட்டும் மீண்டும் மது பாட்டில்களை வாங்கி வந்து அங்கு மது அருந்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த சிராஜ்சிங், அதே பகுதியில் வசிக்கும் யஸ்வந்த் என்பவருடன் சேர்ந்து, அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேரிடமும் தன்னை விட்டுவிட்டு தனியாக மது குடிப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த யஸ்வந்த், ஜீவாவை தாக்கினார். இதனை வெங்கடேஷ் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த யஸ்வந்த், வெங்கடேசின் மார்பு பகுதியில் கையால் பலமாக குத்தினார். இதில் நிலைதடுமாறி பின்புறமாக விழுந்த வெங்கடேஷின் தலையில் பலமாக அடிபட்டதால் அவரது வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் கொட்டியது.

பின்னர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்து யஸ்வந்த் மற்றும் சிராஜ்சிங் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்