புஞ்சைபுளியம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

புஞ்சைபுளியம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-21 20:48 GMT
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிக்கூட மாணவர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பேரநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். அவருடைய மகன் அன்பு கண்ணன் (வயது 15). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் பஸ் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார். அதேபோல் நேற்று காலை அன்பு கண்ணன் வழக்கம்போல் பள்ளிக்கூடம் வந்தார். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அன்பு கண்ணன் மற்றும் நண்பர்கள் 4 பேருக்கும் கிணற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
கிணற்றில் மூழ்கினார்
இதைத்தொடர்ந்து 5 பேரும் அருகே எரங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதையடுத்து அன்பு கண்ணன் உள்பட 5 பேரும் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்பு கண்ணனின் நண்பர்கள் மட்டும் குளித்துவிட்டு கிணற்றில் இருந்து மேலே ஏறினார்கள். 
ஆனால் அன்பு கண்ணன் மட்டும் வரவில்லை. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. இதனால் நண்பர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சாவு
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி அன்புகண்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் கிணற்றின் உள்ளே விளக்கு பொருத்தி தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நவீன கேமராவை கிணற்று தண்ணீரில் மூழ்கடித்து அன்பு கண்ணனை தேடி பார்த்தனர். இதன் மூலம் கிணற்றில் மூழ்கிய மாணவன் உடல் இரவு 9.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்புகண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்