திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு மறுதேர்தலில் 73.55 சதவீத ஓட்டுகள் பதிவு

திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் மறுதேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 73.55 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

Update: 2022-02-21 20:45 GMT
திருமங்கலம், 

திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் மறுதேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 73.55 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

கையெழுத்து போடாமல்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் 17-வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். இதில் தி.மு.க. சார்பில் ராஜம்மாளும், அ.தி.மு.க. சார்பில் உமா விஜயனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தியும், பா.ஜ.க. சார்பில் இருளாயி என 4 பேர் ேபாட்டியிடுகின்றனர்.
இந்த வார்டில் திலகர் தெரு, உத்தண்டன் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, வளையல்காரத்தெரு, நெல்லையப்பன் சந்து, அனந்தன் தெரு, அழகப்பன் சந்து, முனியாண்டி கோவில் தெரு, உசிலை ரோடு, செண்பகமுத்து சந்து, ஞானதேசிகன் சந்து, மாப்பிள்ளை விநாயகர் தெரு, கருப்பணன் கோவில் சந்து, மேகப்பன் சந்து, சேர்வக்காரன் சந்து உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அங்கு ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வார்டில் 949 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
 வாக்களிக்கும் தினத்தன்று அனுசுயா என்ற பெண் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வந்தார். ஆனால், அவரது வாக்கை ஏற்கனவே வேறு ஒருவர் செலுத்தியிருப்பதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசுயா விசாரித்த போது, அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண் வாக்களித்து விட்டு கையெழுத்து போடாமல் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், வாக்காளர்கள் கையெழுத்திடும் படிவத்தை அவர் சரிபார்த்த போது, சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கையெழுத்து போடாமல் வாக்களித்திருப்பது தெரியவந்தது. இது பற்றி அவர் வெளியே தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுவாக்குப்பதிவு

இந்த முறைகேடு குறித்த புகாரின் பேரில், அந்த வாக்கு மையத்தில் பெண்களுக்கான வாக்குச்சாவடிக்கான ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. 
 தேர்தல் நடத்தும் அலுவலர் லியோன் முன்னிலையில் நேற்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு மையத்துக்குள் ெபண் வாக்காளர்களை தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படவில்லை. 

தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

இதற்கிடையே, காலை 10.30 மணி வரை சுமார் 200 பெண்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு இருந்தனர். அந்த நேரத்தில், வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி, 50 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 
இந்த நிலையில் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் கமல்கிஷோர் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாலை 3 மணிக்குமேல் நடந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் டி.ஐ.ஜி. ெபான்னி, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணி வரை அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. அதன்பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒரு மணி நேரத்தில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. 
பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. இவை அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.  அதன்படி, திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

73.55 சதவீத வாக்குகள் பதிவு

மொத்தம் உள்ள 949 பெண் வாக்காளர்களில் 698 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 73.55 ஆகும். 
அதே நேரத்தில் இந்த வார்டில் உள்ள ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 832 ஆகும். அதில் கடந்த 19-ந்தேதி நடந்த தேர்தலில் 625 ஆண்கள் ஓட்டு போட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்