திம்பம் மலைப்பாதையில் கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுது; 22 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு; உணவு, குடிநீர் இன்றி விடிய விடிய பயணிகள் அவதி
தி்ம்பம் மலைப்பாதையில் கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 22 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் விடிய, விடிய பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
தாளவாடி
தி்ம்பம் மலைப்பாதையில் கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 22 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் விடிய, விடிய பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடாக திம்பம் மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்களில் அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இரவு நேர...
இதற்கிடையே திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்து தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பழுதாகி நின்றது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.
இந்த மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி திடீரென பழுதாகி நின்றது. எவ்வளவோ முயன்றும் டிரைவரால் லாரியை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 மணி நேர போராட்டத்துக்கு...
பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதிக அளவில் கிரானைட் பாரம் இருந்ததால் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஜாக்கிகள் மூலம் லாரியை தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் பணி நடந்தது. 22 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாக்கிகள் அகற்றப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. எனினும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பயணிகள் அவதி
லாரி பழுதாகி நின்ற இடம் வனப்பகுதி என்பதால் ஓட்டல், டீக்கடை உள்பட எதுவும் கிடையாது. இதனால் நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து நேற்று மதியம் 2 மணி வரை விடிய விடிய உணவு, குடிநீர் கிடைக்காமல் பஸ்சில் வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் வனப்பகுதியில் இரவில் கடும் குளிர் நிலவியது. இதனாலும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தாங்கள் வந்த வாகனங்களில் இருந்து இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தடை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதையில் குறைந்த எடை உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. ஆனால் அந்த விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.
இதனால் 30 டன் முதல் 40 டன் வரையிலான பாரம் கொண்ட லாரியானது, திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது. எனவே அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்,’ என்றனர்.