சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் படுகொலை: இறுதி ஊர்வலத்தில் பயங்கர வன்முறை - வாகனங்களுக்கு தீவைப்பு; 144 தடை உத்தரவு அமல்
சிவமொக்காவில் கொலை செய்யப்பட்ட பஜ்ரங்தள பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவமொக்கா:
பஜ்ரங்தள் பிரமுகர் கொலை
சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). இவர் பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹர்ஷா, தீர்த்தஹள்ளி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், பாரதி காலனி 2-வது மெயின் ரோடு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளை வழிமறித்தப்படி ஒரு கார் வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ஹர்ஷாவை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த ஹர்ஷா, ரத்த ெவள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் நேற்று முன்தினம் நள்ளிரவே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சீகேஹட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், சிவமொக்கா நகரில் பல பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
இந்த நிலையில் நேற்று காலை ஹர்ஷாவின் உடல் அரசு மெக்கான் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை ெசய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே ஹர்ஷாவின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங்தள மற்றும் இந்து அமைப்பினர் சீகேஹட்டி பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையோரம் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சிவமொக்கா டவுன் பஸ் நிலையம் அருகே சென்ற அவர்கள், அங்கிருந்த பஸ் மற்றும் கார்கள் மீது கல்வீசி தாக்கினார்கள்.
இதேபோல், சிவமொக்கா நகரில் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரமோத் காலனியில் உள்ள திருமண மண்டபம், ஓட்டல் மீது கல்வீசி தாக்கினர். இந்த கல்வீச்சில் 2 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவியது.
அப்போது அங்கு வந்த போலீசார், இந்து அமைப்பினா் மீது தடியடி நடத்தினர். மேலும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டும் வீசி கூட்டத்தை கலைத்தனர்.
ஈசுவரப்பா அஞ்சலி
இந்த நிலையில் சிகேஹட்டியில் உள்ள அவரது வீட்டில் ஹர்ஷாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஹர்ஷாவின் வீட்டுக்கு மந்திரி ஈசுவரப்பா, எடியூரப்பாவின் மகனும், சிவமொக்கா எம்.பி.யுமான ராகேவந்திரா ஆகியோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி ெசலுத்தினார்கள்.
இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹர்ஷாவின் உடலை வித்யாநகரில் உள்ள மயானத்தில் தகனம் ெசய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் மந்திரிகள் ஈசுவரப்பா, அரக ஞானேந்திரா மற்றும் ராகவேந்திரா எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலத்தில் வன்முறை
இந்த இறுதி ஊர்வலம் சிகேஹட்டி, எஸ்.பி.எம். சாலை, பி.எச்.சாலை. கிளர்க்பேட்டை வழியாக வித்யாநகர் துங்கா ஆற்றங்கரையோரத்தில் உள்ள மயானத்துக்கு சென்றது. இந்த இறுதி ஊர்வலத்தின்போது இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் ஏ.சித்தய்யா, காந்தி பஜாரில் சாலையோரம் நிற்கும் வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
பி.எச்.சாலையில் உள்ள பழக்கடையை வன்முறையாளர் சூறையாடினார்கள். மேலும் சாலையோரம் நின்ற தள்ளுவண்டிகளுக்கும் தீவைத்து எரித்தனர். பொருட்களை கால்வாயில் தூக்கி வீசினார்கள். இதையடுத்து போலீசார் அங்கு வந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். அதன்பின்னர் மாலை 4 மணி அளவில் வித்யாநகர் மயானத்தில் ஹர்ஷாவின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
உள்துறை மந்திரி ஆய்வு
இந்த நிலையில், உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, மாவட்ட கலெக்டர் செல்வமணி, கூடுதல் டி.ஜி.பி. முருகன், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் ஆகியோர் சிகேஹட்டி, ரவிவர்மா வீதி, கே.ஆர்.பேட்டை தீர்த்தஹள்ளி சாலை, பாரதி காலனி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்ைக நடவடிக்கைகளை எடுக்க போலீசாருக்கு மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டார்.
144 தடை உத்தரவு
பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் சிவமொக்கா நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் நகரில் பாதுகாப்பு பணிக்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிவமொக்கா நகரில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தி மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டாலும், தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்து அமைப்பு பிரமுகர் கொலையில் 5 பேர் கைது
சிவமொக்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்து அமைப்பு பிரமுகர் ஹர்ஷா மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது தாய் பத்மா, தொட்டபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஹாசீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு கூறுகையில், பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் கொலையில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். சிவமொக்காவில் வன்முறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பள்ளி-கல்லூரிகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை
பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் ஹர்ஷா கொலை செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவமொக்கா மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார். ஆனால் சிவமொக்கா மற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளாா்.