கொலை மிரட்டல் வழக்கில் கணவன்-மனைவிக்கு ஒரு ஆண்டு ஜெயில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
கொலை மிரட்டல் தொடர்பான வழக்கில் கணவன், மனைவிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது
நெல்லை:
கொலை மிரட்டல் தொடர்பான வழக்கில் கணவன், மனைவிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கொலை மிரட்டல்
மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் தங்க நகைகளை ரஸ்தாவை சேர்ந்த சண்முகம் (42) என்பவரது நிதி நிறுவனத்தில் அடகு வைத்து உள்ளார்.
கடந்த 2018-ம் வருடம் ராஜேந்திரன் நகைகளை திருப்புவதற்காக ரூ.45 ஆயிரத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். சண்முகம் பணத்தை பெற்றுக்கொண்டு நகையை திருப்பி கொடுக்காமலும், மற்றும் சண்முகம் அவருடைய மனைவி சுதா (37) ஆகிய இருவரும் ராஜேந்திரனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
ஜெயில்
இதுகுறித்து ராஜேந்திரன் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், சுதா ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது நெல்லை 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சண்முகம், சுதா ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கை சிறப்பாக நடத்திய மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.