நேரம் வரும்போது எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் - மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
நேரம் வரும்போது எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
5 பேர் கைது
சிவமொக்காவில் இந்து அமைப்பை சேர்ந்த வாலிபரான ஹர்ஷா கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் 5 பேர் ஈடுபட்டு இருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. சிவமொக்காவில் ஒருவரும், பெங்களூருவில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கூடுதல் டி.ஜி.பி. முருகன் சிவமொக்காவில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்?, அவர்களது பின்னணி என்ன? என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகே அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.
தகுந்த தண்டனை
ஹர்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எதிராக கோர்ட்டில் சரியான ஆதாரங்களை வழங்கி, கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்பது போலீஸ் துறையின் கடமையாகும். அதன்படி, கொலையாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை, அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை முன் மாதிரியாக இருக்கும் என்பதை இந்த சந்தர்பபத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
ஹர்ஷாவின் உடலை எடுத்து சென்ற போது சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. அதனை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஒரு உயிரை இழந்திருப்பதால், ஆதங்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்கள் மீது போலீசார் நடவடிககை எடுக்காமல் வேடிக்கை பார்க்கவில்லை. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி இருந்தார்கள். தற்போது சிவமொக்காவில் அமைதி திரும்பி உள்ளது.
சட்டத்தை கையில் எடுக்க...
ஹர்ஷா கொலைக்கு பின்பு சிவமொக்கா மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்.
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும். எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும். அதற்கான நேரம் வரும் போது பா.ஜனதா அரசு செய்யும். பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களுக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுபோல், அந்த அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
ஹர்ஷா கொலைக்கும், ஹிஜாப்புக்கும் சம்பந்தமில்லை
ஹிஜாப் விவகாரத்தில் தான் சிவமொக்காவில் பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த ஹர்ஷா கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், சிவமொக்காவில் நடந்த ஹர்ஷா கொலைக்கும், ஹிஜாப் விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது தான் அதுபற்றி தகவல் தெரியும். ஹர்ஷா கொலை நடந்ததும், அதில் முஸ்லிம் வாலிபர் ஈடுபட்டு இருப்பதாக சில மந்திரிகள் பேசியுள்ளனர். அது அவர்களது கருத்தாகும். மந்திரிகளின் பேச்சு பற்றியும் விசாரிக்கப்படும், என்றார்.