வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-02-21 19:23 GMT
சேலத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதனின் கடமை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை பிடித்து போலீசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்து உள்ளார். அது தவறு என்று முதல்-அமைச்சர் சொல்கிறாரா?. 
ஜெயக்குமார் மீதும், அவருடன் இருந்தவர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சர் என்பவர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடியவர். குற்றவாளிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. அப்படித்தான் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. தற்போது 9 மாத கால ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. குற்றவாளிகளுக்கு முதல்-அமைச்சரே துணை போவது வேடிக்கையாக இருக்கிறது.
வாய்மொழி உத்தரவு
அ.தி.மு.க.வை பொறுத்த வரை சட்ட ரீதியாக எதையும் சந்திக்க தயார். மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், இதை மாவட்ட கலெக்டர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ள அமைச்சர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் எப்படியாவது தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது. 
முதலில் தபால் வாக்கு, பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டாக எண்ணி, அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு உண்டான சான்றிதழை வழங்க வேண்டும். அதன் பிறகு தான் அடுத்த வார்டு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோர்ட்டு உத்தரவு
ஆனால் அனைத்து வார்டுகளையும் எண்ணி முடித்த பிறகு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தவறு செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது. மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களை ஜனநாயக முறைப்படி அறிவிக்க வேண்டும். அது தான் நீதி, தர்மம். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்கள் என்றால் இந்த அரசு சட்டத்தை எப்படி மதிக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
குறைந்த வாக்குப்பதிவு
அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு பிரச்சினை நடந்து கொண்டே இருக்கிறது. தன்னுடைய தவறை மறைக்க அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க. மீது குற்றம் சாட்டுகிறார். தேர்தலில் எந்த அளவில் முறைகேடு நடந்து உள்ளது என்று அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து உள்ளார்கள். நான் (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சராக இருந்த போது எனது தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி உள்பட எந்த ஒரு இடத்திலும் முறைகேடு நடக்கவில்லை.
தோல்வி பயத்தால் தான் தி.மு.க.வினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் எப்போதும் இல்லை. தேர்தல் ஆணையம், காவல் துறை சுயமாக செயல்படவில்லை. சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்து உள்ளது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சென்னையில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டதால் தான் மக்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் எப்போதும் இல்லாத அளவில் குறைந்த அளவு சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்