தபால் வாக்குகளில் முறைகேடா?
தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை,
தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தபால் வாக்குகள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பாஸ்கரன் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே நகராட்சியில் பணிபுரியும் 174 தற்காலிக தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டு, தபால் ஓட்டுகளை வாக்குப்பெட்டியில் போடச் சொன்னதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு அ.தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர், பா.ஜ.க.வினர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
முற்றுகை
தற்காலிக பணியாளர்களுக்கு தபால் ஓட்டு கிடையாது எனவும், தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதால் அதை எண்ணக் கூடாது எனவும் நகராட்சி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தபால் வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சியினர், பா.ஜ.க.வினர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.