மின்வேலியில் சிக்கி ஒருவர் சாவு
மேல்மலையனூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. கீழ் புதுப்பட்டில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் உடனே அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலகிருஷ்ணன் எலிகளிடம் இருந்து தனது நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக வயல்வெளியை சுற்றி சட்டத்தை மீறி மின்வேலி அமைத்திருந்தார்.
அதில் அந்த 55 வயதுடையவர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இருப்பினும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்வேலியில் சிக்கி இறந்தவர் யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.