வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-02-21 18:29 GMT
கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், அரவக்குறிச்சி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 246 வார்டுகளுக்கு 1,330 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 
இதில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 363 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 5 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் 241 வார்டுகளுக்கு மொத்தம் 938 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீதமும், 3 நகராட்சிகளில் 68.15 சதவீதமும், 8 பேரூராட்சிகளில் 86.43 சதவீதமும் என மாவட்டத்தில் 76.34 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹசானா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 
இந்த 7 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் கண்காணிப்பு  கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
மேலும் வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு  கேமரா மூலம் ஒவ்வொரு மேஜையும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளரும், பட்டு வளர்ச்சித்துறை இயக்குனருமான சாந்தி நேற்று தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரூர் மாநகராட்சியின் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்தும், வாக்கு எண்ணிக்கை சுற்றுகள், மேஜைகள் குறித்தும், கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது கரூர் மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்