மோட்டார் சைக்கிள்கள் மோதல்;கொத்தனார் சாவு

ஆசாரிபள்ளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-21 18:24 GMT
ராஜாக்கமங்கலம்:
ஆசாரிபள்ளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
கொத்தனார்
ஆசாரிபள்ளம் அருகே உள்ள பாம்பன்விளையை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 36), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வசந்தகுமார் சில நாட்களில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.  
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வசந்தகுமார் ஆசாரிபள்ளத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பாம்பன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை பாலம் அருகே வந்தபோது எதிரே முட்டம் பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் பிரதீஷ் (20) மற்றும் அவரது நண்பரான அம்மாண்டிவிளையை சேர்ந்த அசோக் மகன் அனிஷ் (21) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்குநேர் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். 
சாவு
 இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார். பிரதீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனிசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்