ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5½ லட்சம் திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5½ லட்சத்தை திருடிய ஆசாமியையும், மற்றொரு சம்பவத்தில் பஸ்சில் 5 பவுன் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த ஆசாமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-21 18:11 GMT
திருச்சி, பிப்.22-
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5½ லட்சத்தை திருடிய ஆசாமியையும், மற்றொரு சம்பவத்தில் பஸ்சில் 5 பவுன் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த ஆசாமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கியில் அடமானம்
 மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சரண்யா. இவர் வையம்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ.5½ லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். பஸ் திருச்சி  -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்றதும் பணம் வைத்திருந்த கைப்பையை பார்த்த போது அது திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா பஸ்சில் இருந்த மற்றபயணிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.
 உடனே பஸ்ஸில் இருந்து இறங்கிய அவர் சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார். உடனே வையம்பட்டி போலீசார் திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சம்மந்தப்பட்ட பெண் சென்ற பஸ்சை பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனாலும் எந்தவித தொகையும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனைக்கு ஆளான சரண்யா கதறி அழுதார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
நகை-பணம் `அபேஸ்’
*சமயபுரம் மாகாளிகுடியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மனைவி சித்ரா (வயது 54). தம்பதி இருவரும் கடந்த 20-ந் தேதி பகல் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறினர். அப்போது சித்ரா கைப்பையில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 ஆயிரம் வைத்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது கைப்பையில் இருந்த நகை மற்றும் பணம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை `அபேஸ்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
*திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (36). பெயிண்டரான இவர் நேற்று மேல கல்கண்டார் கோட்டை பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தியை காட்டி மிரட்டி பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்த பரதன் (25), பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (33), பொன்மலை கணேசபுரத்தைசேர்ந்தபிரேம்குமார்(38),மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த தங்கசாமி (43) ஆகியோர் பணம் பறிக்க முயன்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்