வேலூர் மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
வேலூர் மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வேலூர்
வேலூர் மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ஆயுள் தண்டனை கைதி
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 27). கடந்த 2018-ம் ஆண்டு முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த வழக்கில் இவரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கில் வேலூர் கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டு நீதிபதி குணசேகரன் கடந்த 2019-ம் ஆண்டு முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில் வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியில் 160 ஜெயில் காவலர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி காவலர் பயிற்சி பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் முத்துக்குமார் உள்பட 21 ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள முட்செடிகள், புதர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 21 பேரையும் 3 ஜெயில் காவலர்கள் கண்காணித்தனர்.
இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் உணவுக்காக ஆயுள் தண்டனை கைதிகளை ஜெயிலுக்கு அழைத்து செல்வதற்காக காவலர்கள் எண்ணிப்பார்த்தனர். அப்போது அங்கு 20 பேர் மட்டுமே இருந்தனர். முத்துக்குமாரை காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் பயிற்சி பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடிப்பார்த்தனர். ஆனாலும் முத்துக்குமார் கிடைக்கவில்லை. அவர் அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்தது.
போலீசில் புகார்
அதையடுத்து காவலர்கள் உடனடியாக இதுகுறித்து ஜெயில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயில் அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி பள்ளி வளாகத்தில் முத்துக்குமாருடன் பணியில் ஈடுபட்ட 20 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஜெயிலர் மோகன்குமார் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள். வேலூர் ஜெயிலில் ஆயுள்தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் ஜெயில் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.