குமாரபாளையம் அருகே விபத்தில் பெண் பலி 2 பேர் படுகாயம்
குமாரபாளையம் அருகே விபத்தில் பெண் பலி 2 பேர் படுகாயம்
குமாரபாளையம்:
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சிவகாம சுந்தரி (வயது 32). கணவன்-மனைவி இருவரும் பவானியில் கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகாம சுந்தரி, டிரைவர் துரைக்கண்ணன் (30), பணியாளர் பிரகாஷ் (30) ஆகிய 3 பேரும் சரக்கு வாகனத்தில் சேலத்துக்கு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு நள்ளிரவில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பவானிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது குமாரபாளையம் அருகே வளையக்காரனூரில் உள்ள தனியார் கல்லூரி முன்பு வந்தபோது, சரக்கு வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரி திடீரென வேகத்தை குறைத்து இடதுபுறமாக திரும்பியது. அந்த சமயம் சரக்கு வாகனம் லாரியின் பின்பக்க பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய சிவகாம சுந்தரி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். டிரைவர் துரைக்கண்ணனும், பிரகாசும் படுகாயம் அடைந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.