பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக்கோரி நடராஜர் கோவிலில் 26-ந்தேதி முற்றுகை போராட்டம்

பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக்கோரி நடராஜர் கோவிலில் 26-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2022-02-21 17:35 GMT
சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். உலக புகழ் பெற்ற கோவில், அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் விருப்பத்திற்கு ஆட்டிப்படைப்பது நடராஜருக்கு செய்யக்கூடிய பெரிய துரோகம். 

பக்தர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நடராஜர் கோவிலில் மட்டும் தான் பல காலங்களாக நடந்து வருகிறது. தீண்டாமை, சாதி பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில், தரிசனம் செய்ய முயன்ற, ஜெயஷீலா என்ற பெண்ணை தீட்சிதர்கள் தாக்கி அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் தீட்சிதர்கள் மீது, சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முற்றுகை போராட்டம்

எனவே நடராஜர் கோவிலை அரசு சட்டம் இயற்றி, அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். மேலும் பெண் தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தீட்சிதர்களை கைது செய்ய தடையாக இருப்பவர்களை பற்றி வெளிப்படையாக போலீசார் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தீட்சிதர்கள் கைது செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். இல்லையென்றால் வருகிற 26-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், நடராஜர் கோவிலில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி. எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்